பெரியகுளம்: இரு தரப்பினரிடையே கலவரம், இருவர் பலி!

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.


மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் இரு பிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக பலமுறை மோதல்கள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று கைலாசபட்டி பிள்ளையார் கோவில் அருகே இரு தரப்பினரிடையே வாய்த் தகராறு முற்றி கலவரமாக மாறியது என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் பெருமாள் (வயது60) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து கொலையுண்டவரின் உறவினர்கள் இறந்தவர் உடலை சாலையில் போட்டு கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி தேனி - பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இறந்த பெருமாளின் உடலை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். பின் அவரது உறவினர் மறியலை கைவிட்டனர்.

இந்நிலையில் இந்த மோதலில் படுகாயமடைந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதில் காயமடைந்த செல்வகுமார் கங்கா தேவன், அஜித் ஆகியோர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.